1 Chronicles 22

1அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான்.

2பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான்.

3தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், 4எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 5தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதேச் சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான்.

6அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 7சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். 8ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய்.

9இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன். 10அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

11இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக. 12கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. 13கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

14இதோ, நான் என்னுடைய சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய்.

15வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள். 16பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; கர்த்தர் உன்னோடு இருப்பாராக என்றான்.

17தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: 18உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.

19

Copyright information for TamULB